என்ன ?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சார்லீ ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தாக்குதல் இந்த மாதத்தின் மிக முக்கியமான உலக நிகழ்வு. இந்த தாக்குதலிலும் அதன் பின்னர் அங்கே வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களிலும் 17 பேர் கொல்லப்பட்டனர். அந்த பத்திரிகையின் ஆசிரியர், மேலும் நான்கு கார்டூனிஸ்டுகள், மற்றும் சில எழுத்தாளர்கள் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
ஏன்?
சார்லி ஹெப்டோ ப்ரான்ஸில் வெளிவரும் நகைச்சுவை வார இதழ். யாராக இருந்தாலும் போட்டுத்தாளிக்க தயங்காத, முதுகெலும்பு உள்ள, உலகின் அரிதான பத்திரிகைகளில் ஒன்று. தங்களை மதசார்பற்ற, நாத்திக, தீவிர இடதுசாரி, இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக சொல்லிக்கொண்ட பத்திரிகை இது. இஸ்லாமியர்கள் முகமது நபி அவர்களின் உருவப்படத்தை வரைவதை அனுமதிப்பதில்லை. ஆனால் சார்லி ஹெப்டோவில் நபிகளை கேலிச் சித்திரமாக வரைந்தனர். பலமுறை இதனால் அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்தது. 2011-ல் அடுத்த இதழுக்கு ஆசிரியர் முகமது நபிதான் என்று இப்பத்திரிகை அறிவித்ததை அடுத்து மறுநாளே அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. 1969-ல் தொடங்கப்பட்டு 81-ல் மூடப்பட்ட இப்பத்திரிகை 92-ல் மறுபடியும் தொடங்கப்பட்டது. சுமார் 60,000 பிரதிகள் அச்சடிக்கப்படும் இந்த இதழ், தாக்குதலை அடுத்து மறுஇதழ் 50 லட்சம் பிரதிகள் அச்சானது. இதில் இருந்து கிடைக்கும் வருமானம் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப்புறம்?
இந்த படுகொலைத் தாக்குதலைக் கண்டித்து பாரிஸில் 30 லட்சம்பேர் கூடிய பத்திரிகை சுதந்தரத்தை ஆதரிக்கும் ஒற்றுமைப் பேரணிகள் நடந்தன. இந்த பேரணியில் 40 உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். உலகெங்கும் ஊடக அமைப்புகளும் பொது அமைப்புகளும் இதைக் கண்டித்தன. நான் தான் சார்லீ என்று எழுதப்பட்ட வாசக பதாகைகள் எங்கும் எழுந்தன.
யார்?
மேற்கு ஆசியாவில் நடக்கும் ஜிகாதிப் போருடன் தொடர்புடைய இஸ்லாமியர்கள்தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட இருவர் சகோதரர்கள். இவர்கள் அடுத்த நாளே கொல்லப்பட்டனர். இன்னொருவரும் வேறொரு தாக்குதலில் கொல்லப்பட்டார். நான்காவது நபர் தேடப்படுகிறார்.
விவாதம்
சார்லி ஹெப்டோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த போப், மத நம்பிக்கைகளை கேலி செய்யக்கூடாது. யாரையும் தூண்டிவிடக்கூடாது என்றார். ஆனால் அப்பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர்,‘நாங்கள் மதங்களைக் குறிவைக்கவில்லை. ஆனால் அரசியலில் மதம் ஈடுபடும்போது அதைத் தாக்குகிறோம். கடவுள் அரசியலில் நுழைகையில் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகிறது’ என்று பதில் கூறி உள்ளார். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகைகள்கூட நபிகள் கார்ட்டூன் தாங்கிய அப்பத்திரிகை அட்டையை வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையுடன் விளையாடுவதா? இந்த விவாதம் முற்றுப்பெறவில்லை.
ஜனவரி, 2015.